தோஷங்களை நிவர்த்தி செய்யும் சௌபாக்கிய சுந்தரி விரதம்!

அன்னை பார்வதி தேவியைக் குறித்துச் செய்யப்படும் ஒரு விரதமே, ‘சௌபாக்கிய சுந்தரி விரதம்’. மிகப் பழங்காலத்தில் அனுசரிக்கப்பட்டு வந்த விரதங்களுள் ஒன்று இது. ஒரு பெண்ணை வாழ்த்தும் போது, ‘சௌபாக்கியவதியாக இரு’ என்று வாழ்த்துவது வழக்கம்.

‘சௌபாக்கியம்’ என்பது, நல்ல கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளும், எல்லா வகையான செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ்வதே ஆகும். அத்தகைய நிறை வாழ்வு வாழும் பாக்கியத்தைத் தரும் இந்த விரத பூஜையில், அன்னை பார்வதி தேவியை, ‘சௌபாக்கிய சுந்தரி’ என்னும் திருநாமத்தால், சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த விரதம் இருப்பதால், பார்வதி தேவி மனமகிழ்ந்து, எல்லா நலன்களும் அருள்வாள். வாழ்வில் தோன்றும் எல்லா விதமான இன்னல்களையும் நீக்கும் மகிமை பொருந்திய விரதம் இது. இதை முறையாகக் கடைபிடிப்போரின் சகல தோஷங்களும் நீங்கி, நலம் பெருகும். இந்த விரதம் அனுசரிப்பது காலமாற்றத்தினால் குறைந்து விட்ட போதிலும், சில பரிகார காரணங்களுக்காக அனுசரிக்கப் படுகின்றது.

குறிப்பாக, திருமணத் தடை விலகவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த விரதம் அனுசரிப்பது மிகச் சிறந்த பலனை அளிக்கும். அங்காரக தோஷம் இருக்கும் ஜாதகர்கள், இந்த விரதத்தை தோஷ நிவர்த்திக்காக அனுசரிக்கலாம்.

– அனைவருக்கும் பகிருங்கள்