ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது ஏன்?

ஆடி மாதத்தில் மனிதர்கள் சுப செயல்கள் ஏதும் செய்ய மாட்டார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த மாதம் முழுவதும் சூரியன், பார்வதி, மகாலட்சுமி, மாரி, பெருமாள், ஆண்டாள், முருகன், பூமாதேவி, போன்ற தெய்வங்களை வழிபடுவதற்குரிய மாதம் ஆகும்.

குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்கு இந்த மாதம் மிகவும் உகந்ததாகும். சூரிய பகவான் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் தன் ரதத்தை திசை மாற்றிச் செலுத்துகிறான். சூரியன் தை மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

ஆடி மாதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்போது தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த ஆடி மாதப் புண்ணிய காலத்தில் புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பர், எனினும் ஆடி மாத முதல் மூன்று நாட்கள் நீராடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அந்த முதல் மூன்று நாட்கள் நதி ரசஜ்வாலா எனப்படும். இந்த மூன்று நாட்கள் நதிகளுக்குரிய தீட்டு நாட்களாகும்.

ஜீவநதியான கங்கையில் எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டிருப்பதால் ஆடி மாதம் புதிதாக நீர் வரும் வாய்ப்பு இல்லை, மற்ற ஆறுகளில் பழங்காலத்தில் ஆடி மாதத்தில் புது நீர் வரும். அந்த நீர் பெரும்பாலும் கலங்கலாகவும் அழுக்காகவும் இருக்கும். எனவே ஆடி முதல் தேதியை ஒட்டி வரும் புதிய நீர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் அந்தச் சமயத்தில் நதிகளில் குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் கடல், கோவில்களில் உள்ள புனிதக் குளங்களில் நீராடலாம்.

ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும். மேலும், ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதாரம் செய்தான் என்று புராணம் கூறுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் துளசி வனத்தில் கோதை ஆண்டாள் அவதரித்தாள். ஒவ்வொரு ஆடி மாத வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமை பெண்களுக்கு மிகச் சிறப்பான நாள்.

இந்த நாளில் அம்மனை வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்தாகப் புராணம் கூறுகிறது. அதனால் அன்று அம்மன் கோவில்களில் வளைக்காப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்நாளில் அம்பாளுக்கு கண்ணாடி வளையல்களை சமர்ப்பித்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் நீடிக்கும்.

கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இந்த ஆடி மாதத்தின் சிகரமாகத் திகழ்வது ஆடித்தபசு விழா. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் கோமதி அம்மன் ஆடித்தபசு விழா பத்து நாட்கள் நடைபெறும். தவமிருந்த அன்னைக்கு இறைவன் சங்கர- நாராயணராகக் காட்சி தந்த நாள் ஆடி பவுர்ணமி நாளாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்