செல்போனில் இருக்கும் அதிகமான ஆபத்துகள் என்ன?

இன்றைய உலகம் செல்போன் யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. மனிதனின் 6-வது விரல் செல்போன் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த செல்போன். இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. வணிகர்கள், பயணிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் அவசரத் தொடர்பு ஆதரவாளனாக செல்போன் விளங்குகிறது. செல்போனில் கிடைக்கும் நன்மைகளை விட, இதனால் ஏற்படும் ஆபத்துகளே அதிகம். அதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்…!

செல்போன் அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்து என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தியதால் மூளைப் புற்றுநோய்க்குப் பலியானார். டாக்டர் ஒருவர் இந்த உண்மையை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபித்து முதல் எச்சரிக்கை மணியை அடித்தார்.

செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் உடனே இறப்பு இல்லை. ஆனால் நிச்சயமாக நோய்களால் தாக்கப்படுவர் என்பதை பல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, செல்போன் வெளியேற்றும் மின்காந்த அலைகள் ரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய் மற்றும் மூளைப் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், செல்போனை அதிகம் பயன்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்றும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்று செல்போன் கோபுரங்கள் ஏராளமாக உள்ளன. இவைகள் மூலம் பரவும் மின்காந்த அலைகள் சுற்றுச் சூழலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பறவை இனங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள் போன்றவை இந்த மின் காந்த அலைகளால் தாக்கப்படுகின்றன. செல்போன் வரவுக்குப் பிறகு ஏராளமான நேரம் விரயமாக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை செல்போனில் பேசி மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியும் வீணாக்குகிறார்கள். அவசியமான பணிகளுக்கு செல்போன் பயன்படுத்தப்படுவதைவிட, பொழுதுபோக்கிற்கும், உறவுத் தொடர்புகளுக்குமே இன்று அதிக நேரம் அலைபேசியில் செலவாகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான இதர நாடுகளிலும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மாணவர்கள் தங்களின் நேரத்தையும், கவனத்தையும் இதன் மூலம் இழக்கிறார்கள்.

இதனால் அவர்களது படிப்புகள் பாழாகிறது. எனவே, மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும். மது, போதைப் பொருள் போலவே செல்போன் பயன் பாடும் ஓர் அடிமைப் பழக்கமாக மாறிவருகிறது. இளைஞர்கள் செல்போனை பயன்படுத்தாமல் இருந்தால் பித்துப் பிடித்தவர் போலாகிவிடுகின்றனர் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம், மருத்துவமனை போன்ற பொது இடங்களில் கூட அருகே இருக்கும் சக மனிதர்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் செல்போனில் வெட்டிப்பேச்சுப் பேசும் நாகரீகமின்மை பரவி வருகிறது. செல்போனை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்ட கூடாது என்று விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதனை இழிவாக பார்க்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது.

உயிர் காக்க, அவசரத் தேவைகளுக்கு, பயண நேரத்தில் என செல்போனின் நல்ல பயன்பாடுகள் பல இருந்தாலும்கூட, அதே செல்போன் பல தீய செயல்பாடுகளுக்கும் பயன்படுகிறது என்பது அச்சத்தைத் தருகிறது. கொலை, கொள்ளை, பெண்களை இழிவுபடுத்துதல் போன்ற சமூகத் தீமைகளுக்கும் செல்போனின் பயன்பாடு அதிகம். இன்னும் பலவற்றை அடுக்கலாம். இதனால் செல்போனை குறைந்த அளவை பயன்படுத்த நாம் எல்லோரும் முயற்சி எடுக்கவேண்டும்.

– அனைவருக்கும் பகிருங்கள்