ஆடி மாத ராசிபலன்கள்…அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள் எது?

மேஷம்

வெகுளித்தனமாக பேசும் நீங்கள், வில்லங்கமானவர்களை வெளுத்து வாங்குவீர்கள். சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நீங்கள் மற்றவர்களின் அதிகாரம் ஆணவத்திற்கு கட்டுப்படமாட்டீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

ஆனால் இந்த மாதம் முழுக்க சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண முயற்சியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரை பார்ப்பது நல்லது.

செவ்வாயும் 4ம் வீட்டில் நிற்பதால் பூர்வீக சொத்தில் ஒருபகுதியை விற்று பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் சின்ன சின்ன அலைச்சல், செலவினங்கள் இருக்கும் ஆனால் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணத் தடைகள் நீங்கும். சகோதரருக்கும் திருமணம் கூடி வரும். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வாகனத்தையும் சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

குரு 6ம் வீட்டிலேயே வலுவிழந்து காணப்படுவதாலும், அஷ்டமத்துச் சனி தொடர்வதாலும் சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்கள், குடும்ப அந்தரங்கங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வந்து போகும். 27ம் தேதி முதல் ராகு நான்கிலும், கேது பத்திலும் அமர்வதால் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியில் வாங்கியிருந்த கடனை தீர்க்க புது வழி பிறக்கும்.

பூர்வீக சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மாணவர்களே! மறதி உண்டாகும். எனவே விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வரும். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்யும் அமைப்பு உண்டாகும்.

ஆனால், சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செய்யப்பாருங்கள். வேலையாட்கள் மூலமாக வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உணவு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

மூத்த அதிகாரிகளுடன் பிரச்னை வந்து நீங்கும். கடினமாக உழைத்தும் அதற்கான பலன் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். ஆனால், புது வேலை வாய்ப்புகளும் வரும். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். விவசாயிகளே! மாற்றுப்பயிரிடுங்கள். அரசால் ஆதாயம் உண்டு. நீர் வளம் கிட்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும், சமயோஜித புத்தியாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 20, 21, 23, 27, 28, 29, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 6, 7, 8, 9, 10.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 1ம் தேதி காலை 8.53மணி முதல் 2, 3ம் தேதி இரவு 8.27மணி வரை.

ரிஷபம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை அறிந்த நீங்கள் யாரையும் உதாசீனப்படுத்தமாட்டீர்கள். உண்மையை விரும்பும் நீங்கள், மறைத்துப் பேசுபவர்களை கண்டால் கோபப்படுவீர்கள். இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு கல்யாணம், காதுகுத்து விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குரு 5ல் நீடிப்பதால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும்.

ஆனால், சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக இருப்பதால் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கோதுமை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். 27ம் தேதி முதல் ராகு 3ல் நிற்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.

உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் இப்பொழுது திருப்பித் தருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த மூட்டுவலி, முழங்கால்வலி, நெஞ்சுவலி எல்லாம் பறந்தோடும். கேது 9ல் அமர்வதால் வருங்காலத்திற்காக கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! உங்களுடைய நினைவாற்றல் கூடும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். படிப்பில் முன்னேற்றம் உண்டு.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் பிரச்னை தீரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்வீர்கள். பிரபலங்களும் உங்கள் வியாபாரத்திற்கு உதவிகரமாக இருப்பார்கள். சிமெண்ட், ஸ்டேஷனரி, ஷேர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, கன்னடம் பேசுபவர்களால் வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றும் சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உங்களுடைய முழுத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். சங்கம், இயக்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இழந்த சலுகைகள், வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்திலிருந்து புது ஒப்பந்தம் வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. வரப்புச் சண்டை தீரும். கடந்த கால கசப்புகள் நீங்கி, வெற்றிக் கனியை சுவைக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 22, 23, 24, 25, 26, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 2, 8, 9, 10, 11, 12.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 3ம் தேதி இரவு 8.27 மணி முதல் 4, 5, 6ம் தேதி காலை 7.48 மணி வரை.

மிதுனம்

கொள்கை கோட்பாட்டுடன் வாழும் நீங்கள் மனதில் நினைப்பதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். உதட்டால் பகட்டாக பேசாமல் உள்மனதிலிருந்து பேசுபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.

2ல் சூரியன் நிற்பதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். காரசாரமாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த மாதம் முழுக்க செவ்வாய் 2ல் நிற்பதால் பேச்சில் கடுமைக் காட்டாதீர்கள். மனைவியுடன் அவ்வப்போது ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். சுக்கிரன் 26ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் உடல் நிலை சீராகும். உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

4ம் குரு நீடிப்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம், கடன் பற்றிய கவலைகள் வந்து செல்லும். ராசிக்கு 6ம் வீட்டில் சனி சாதகமாக இருப்பதால் வழக்கில் வெற்றியுண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். உடன் பிறந்தவர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். 27ம் தேதி முதல் ராகுவும், கேதுவும் சரியில்லாததால் சமயோஜிதமாகப் பேசி சங்கடங்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் அதை வேறுவிதமாக சிலர் புரிந்து கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் தேவை. அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். தலைமைக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

உங்கள் தரப்பு செயல்பாடுகளை நியாயப்படுத்த தக்க ஆதாரங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களே! சுறுசுறுப்புக் கூடும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விளையாட்டிலும் ஆர்வம் உண்டாகும். கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடு செய்வீர்கள். மாற்றுமதத்தை சேர்ந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.

கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடாதீர்கள். மூத்த அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 20, 23, 24, 25, 26, 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13, 15.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 6ம் தேதி காலை 7.48 மணி முதல் 7, 8ம் தேதி மாலை 5.26 மணி வரை.

கடகம்

கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்ட நீங்கள் காலத்திற்கு ஏற்ப கோலத்தை மாற்றிக் கொண்டாலும் ஒழுக்கம் தவறாதவர்கள். சொல்ல வந்ததை சூசகமாக சொல்லாமல் நெற்றியடியாய் நேருக்கு நேர் பேசுவதில் வல்லவர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.

இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்குள் சூரியனும், செவ்வாயும் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதப் போக்கு மாறும். அவர்களின் உயர்கல்விக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

குரு 3ல் தொடர்வதால் சாதாரண விஷயங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 5ல் சனி நிற்பதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் மோதல் வரக்கூடும். அரசுக் காரியங்களில் நிதானம் தேவை. 27ம் தேதி முதல் ராசிக்குள்ளேயே ராகுவும், 7ல் கேதுவும் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும்.

வீண் வறட்டு கவுரவத்திற்காக பணத்தை வாரி இறைக்காதீர்கள். தலைச் சுற்றல், முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்து போகும். ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களே! தொடக்கத்திலிருந்தே ஆர்வமாக படிக்கத் தொடங்குங்கள். வகுப்பறையில் கடைசி வரிசையில் அமராமல் முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. நட்பு வட்டத்தில் யாரிடமும் எல்லைமீறி பழக வேண்டாம். இறக்கப்பட்டும் ஏமாந்துவிடாதீர்கள்.

உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். கடன் வாங்கி பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.

சலுகைத் திட்டங்களை அறிவித்து புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க திட்டம் தீட்டுவீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றம் வரும். மூத்த அதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். சம்பள பாக்கியை போராடி பெற வேண்டி வரும். சிலர் வேலையை விட வேண்டி வரும். உயரதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்கள் மத்தியில் விமர்சிக்க வேண்டாம்.

வேற்றுமாநிலம், வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். விவசாயிகளே! விளைசலில் கவனம் செலுத்துங்கள். மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். நாவடக்கமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 20, 26, 27, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 6, 7, 13, 14, 16.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.26 மணி முதல் 9,10ம் தேதி வரை.

சிம்மம்

ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென எப்போதும் நினைப்பீர்கள். ஆரவாரத்துடன் அடுக்கு மொழியாக பேசாமல் நறுக்கென்று நாலு வார்த்தை சொல்பவர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் 12ல் மறைந்து நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் மனஇறுக்கங்கள் குறையும். தைரியம் பிறக்கும். செவ்வாயும் 12ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் அலைச்சல்கள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுக்கிரன் 26ம் தேதி முதல் லாப வீட்டில்அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருக்கும் பழைய நண்பர்கள் உதவுவார்கள்.

குருபகவான் வலுவாக இருப்பதால் சமயோஜித புத்தியுடன் பேசி பல நெருக்கடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். 4ல் சனி நிற்பதால் மூச்சுப்பிடிப்பு, சளித்தொந்தரவு, வீண் டென்ஷன் வந்து போகும். தாயாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும்.

அரசு காரியங்கள் இழுபறியாகும். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். 27ம் தேதி முதல் ராசிக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் அமர்வதால் குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சந்தேகத்தாலும், வாக்குவாதத்தாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகம் ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், கிரக பிரவேசம் என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். பார்த்து வெகுகாலமான தூரத்து உறவினர்கள் கூட இனி படையெடுத்து உங்கள் வீடு தேடி வருவார்கள். வழக்கும் சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும். கோஷ்டி பூசலை தீர்ப்பீர்கள்.

மாணவர்களே! விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பங்குதாரர்களால் பலனடைவீர்கள்.

வேலையாட்களும் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, கன்ஸ்ட்ரக்சன், பவர் புராஜெக்ட், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களை அழைத்துப் பேசுவார்கள். சக ஊழியர்களுக்காகவும் சில சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக மகசூல் பெருகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். புகழ், கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 19, 20, 21, 28, 29, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 7, 8, 16.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 11,12ம் தேதி வரை.

கன்னி

காசு பணத்தை விட நட்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் நீங்கள் கடந்த காலத்தை விட வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். கலகலப்பாகவும், கவித்துவமாகவும் பேசும் நீங்கள், அவ்வப்போது ஆகாயக் கோட்டை கட்டுவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ஷேர் மூலமாக பணம் வரும்.

இந்த மாதம் முழுக்க ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். செவ்வாயும் லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் இனந்தெரியாத கவலைகளும், மனஇறுக்கங்களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்துச் செல்லும். ராசிக்கு 3ல் சனி வலுவாக இருப்பதால் வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். மனதில் புது எண்ணங்கள் அரும்பும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும்.

27ம் தேதி முதல் ராசிக்கு 11ல் ராகு அமர்வதால் சவாலான காரியங்களைக்கூட சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், கேது 5ல் நிற்பதால் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும்.

ஆனால், அவர்களால் வீண் அலைச்சலும், செலவும் உண்டு. அரசியல்வாதிகளே! பதவியை தக்க வைத்துக் கொள்ளப்பாருங்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாணவர்களே! வகுப்பாசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். ஓவியம், இலக்கியம் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசைப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வரும் மாதவிடாய்க் கோளாறு குறையும். அடிவயிற்று வலி விலகும். புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பிரச்னை தந்த பங்குதாரரை நீக்குவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இருந்தாலும் ஜென்ம குரு தொடர்வதால் உத்யோகத்தில் வீண்பழி வரக்கூடும். கலைத்துறையினரே! பிறமொழிப் படங்களால் புகழடைவீர்கள். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிலத்தகராறுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பம்பு செட்டை மாற்றுவீர்கள். வி.ஐ.பிகளின் உதவியால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 22 ,23, 24, 26, 31 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 9, 11, 12.

சந்திராஷ்டமம்: ஜூலை 17,18ம் தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 13, 14, 15ம் தேதி காலை 8.46 மணி வரை.

துலாம்

தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல் நாலு பேருக்கு நல்லது செய்யும் நீங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். தோல்வியால் துவண்டு வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசுபவர்களே! சூரியன் 10ல் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்குக் கூடும்.

பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். 10ம் வீட்டிலேயே செவ்வாய் இருப்பதால் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் வகைகளால் பணம் வரும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தன்னம்பிக்கை கூடும். 12ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் எந்த வேலையை தொடங்கினாலும் தடைப்பட்டுதான் முடியும். மறதி உண்டாகும்.

குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்வதாக இருந்தால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது. ஏனெனில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்களை அவதூறாகப் பேசினாலும் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. 27ம் தேதி முதல் ராசிக்கு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் அமர்வதால் பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும்.

குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளே! தலைமை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புது பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும்.

மாணவர்களே! வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது மறதி ஏற்படும். படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உயர்கல்வியிலும் முன்னேறுவீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த முட்டுக் கட்டைகள், தடைகள் நீங்கும். பங்குதாரர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வேலையை விட்டுச் சென்ற அனுபவமிக்க வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள்.

வேற்றுமாநிலத்தை சேர்ந்த வேலையாட்களால் அனுகூலம் உண்டு. வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. பதவி உயர்விற்காக நீதி மன்றம் சென்றீர்களே! நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். என்றாலும் 10ம் வீட்டில் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லைகள் குறையும். ஏழரைச் சனி நடைபெறுவதால் அக்கம்பக்கம் நிலத்தாருடன் வாய் சண்டை, வரப்புச் சண்டையெல்லாம் வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 25, 26 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 7, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20ம் தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 8.46 மணி முதல் 16ம் தேதி வரை.

விருச்சிகம்

வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பிக்கலாம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கும், நீங்கள், வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் வரக்கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளை கிளறிக் கொண்டிருக்காதீர்கள்.

வழக்குகள் தாமதமாகும். உங்களுக்கு சாதகமாக சுக்கிரன் செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாயும் 9ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வீண் செலவுகளும், புதன் வலுவான வீடுகளில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வேற்றுமதத்தவர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். குரு லாப விட்டிலேயே நீடிப்பதால் மனநிம்மதி கிடைக்கும். பூர்வீக சொத்து பராமரிப்பு செலவுகள் வந்துப்போகும்.

பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ராசிக்குள்ளேயே சனி நிற்பதால் பெரிய நோய்கள் இருப்பதைப் போல் சில அறிகுறிகள் எல்லாம் தெரியும் பயந்துவிடாதீர்கள். 27ம் தேதி முதல் ராசிக்கு 9ல் ராகுவும், 3ல் கேதுவும் அமர்வதால் குலதெய்வ கோலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்படைவார்கள்.

உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். புலம்பிக் கொண்டிருந்த தாயார் இனி சிரிப்பார். அவருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால் ,இளைய சகோதர வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். கோஷ்டி பூசலை ஊக்குவிக்க வேண்டாம்.

மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்தியை கையாளுவீர்கள்.

பழைய வாடிக்கையாளர்கள் மூலமாக புதியவர்கள் அறிமுகமாவார்கள். இருந்தாலும் பற்று வரவு மந்தமாகத்தான் இருக்கும். பெரிய முதலீடுகள் இந்த மாதத்தில் வேண்டாம். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களை அரவணைத்துக் கொண்டுப் போங்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலையாட்கள் அதிக முன் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்யோகத்தில் அலைச்சலும், வேலைச்சுமையும், சிறுசிறு அவமானங்களும், விரும்பத்தகாத இடமாற்றமும் வந்து நீங்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவார்கள். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை அதிகரிக்கும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். புது பம்பு செட் வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 25, 26, 27, 28 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 7, 13, 14, 16.

சந்திராஷ்டமம்: ஜூலை21, 22ம் தேதி வரை.

தனுசு

மற்றவர்களை குறை சொல்லாது தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், ஓசைப்படாமல் பூக்கள் மலர்வதைப் போல, ஆரவாரம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். உங்கள் ராசிக்கு சூரியனும், செவ்வாயும் 8ல் மறைந்திருப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.

படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வெற்றி பெற உதவுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். குருவும் 10ல் தொடர்வதால் உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் அல்லது உங்கள் பெயரை தவறாக சிலர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

அதனால் யாரையும் தாக்கிப் பேசுவதோ, தூக்கிப் பேசுவதோ வேண்டாம். ஏழரைச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புது முதலீடுகள் செய்வதற்கு முன்பாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் அதுவரை அலைச்சலும், பணப்பற்றாக்குறையும், கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்களும், சந்தேகத்தால் பிரிவுகளும் ஏற்படக்கூடும்.

ஆனால் 26ம் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் வந்தமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால் 27ம் தேதி முதல் 8ல் ராகுவும், 2ல் கேதுவும் மறைவதால் பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும்.

சேமிப்புகள் கரையும் எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும், தேவையில்லாத பயணங்களும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களே! மொழித் திறன் வளரும். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் அறிவுரையில் சில உண்மைகள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் அலட்சியப் போக்குடன் இருக்காதீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.

உங்களின் புதுத் திட்டங்களுக்கு பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடையை விரிவுபடுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எலக்ட்ரிக் சிவில், உணவுத் துறையில் அதிகமாக லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும்.

ஆனால், வேலைச்சுமை இருக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். கலைத்துறையினரே! புகழ் கூடும். தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். விவசாயிகளே! நீண்ட காலப் பயிர்களால் லாபமடைவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 19, 20, 21, 28, 29, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 7, 9, 10, 16.

சந்திராஷ்டமம்: ஜூலை 23, 24, 25ம் தேதி காலை 9.12 மணி வரை.

மகரம்

வெள்ளை மனசுக் கொண்ட நீங்கள், சில நேரங்களில் வெகுளித்தனமாக பேசி, சிக்கிக் கொள்வீர்கள். விட்டுக்கொடுப்பவர்கள் எப்போதும் கெட்டுப்போவதில்லை என்பதை அறிந்தவர்கள் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர்கள் மதிப்பார்கள்.

சூரியன் 7ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகு வலி, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். ஆனால் 26ந் தேதி முதல் சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும்.

மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனமாக கையாளுங்கள். ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் அடிக்கடி பழுதாகும். 27ம் தேதி முதல் ராகு களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிலும், ராசிக்குள்ளேயே கேதுவும் அமர்வதால் குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வெடிக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்தாதீர்கள்.

மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்துப் போகும். உங்களிடமிருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை சுட்டிக் காட்டுவார். தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமான அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். ராசிநாதன் சனி லாப வீட்டில் நீடிப்பதால் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும்.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே! பதவியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். சகாக்களின் ஒத்துழைப்பு குறையும்.

மாணவர்களே! அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். கணிதம், ஹிந்தி பாடத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள். டி.வி. பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். சந்தை நிலவரத்திற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் ஓரளவு குறையும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக சில உதவுகள் கிடைக்கும். கமிஷன், எண்ணெய், பெட்ரோ கெமிக்கல், கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடத்துவதாக வருத்தப்படுவீர்கள். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். புது வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! நிலப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், மாதத்தின் பிற்பகுதியில் மகசூல் பெருகும். கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 21, 22, 31 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 9, 10, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்: ஜூலை 25ம் தேதி காலை 9.12 மணி முதல் 26, 27ம் தேதி பிற்பகல் 2.45 மணி வரை.

கும்பம்

ஆழமாக யோசித்து, அதிரடியாக செயல்படும் குணமுடைய நீங்கள், எப்போதும் மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்கள். சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்தும் நீங்கள், சொன்ன சொல் தவற மாட்டீர்கள். சூரியன் இப்போது 6ல் நுழைந்திருப்பதால் இங்கிதமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

தொட்ட தெல்லாம் துலங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். ஷேர் மூலமாக பணம் வரும். செவ்வாயும் 6ம் வீட்டில் நிற்பதால் சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். மனைவிவழியிலும் அடுத்தடுத்து சுபச் செலவுகள் வந்துச் செல்லும். 21ம் தேதி வரை புதன் 6ல் நிற்பதால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகை வந்து செல்லும்.

22ம் தேதி முதல் புதன் 7ல் நுழைவதால் ஓரளவு நிம்மதி உண்டு. விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். குரு 8ல் மறைந்து நிற்பதால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளிவட்டாரத்தில் அவசரப்பட்டு யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

27ம் தேதி முதல் ராகு 6ம் வீட்டிலும், கேது 12ம் வீட்டிலும் அமர்வதால் அதுமுதல் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். மனைவி பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

உடல் ஆரோக்யம் மேம்படும். ஆழ்ந்த தூக்கமும் வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மகனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மாதத்தின் பிற்பகுதியில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு அமையும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்டுவதற்கு சி.எம்.டி., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் வந்து சேரும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் தேடி வரும். எதிர் கோஷ்டிக்காரர்களை ராஜதந்திரத்தால் வீழ்த்துவீர்கள். எதிர்க்கட்சியுடன் இருந்த மோதல்கள் நீங்கும்.

மாணவர்களே! நினைவாற்றல் கூடும். வகுப்பாசிரியர் பாராட்டுவார்கள். விளையாட்டுப் போட்டியிலும் பதக்கம் வெல்வீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கித் தவித்தீர்களே! உண்மையான நட்பு எது என்பதை உணர்வீர்கள். வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் வெற்றி உண்டு.

வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடு செய்யலாம். புதிய முயற்சிகளும் பலிதமாகும். பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள். சந்தில் இருந்த கடையை மெயின் ரோட்டில் மாற்றுவீர்கள். கமிஷன், உணவு, வாகன வகைகளால் பணம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் சிலருக்கு அமையும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். விவசாயிகளே! ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 23, 24 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்: ஜூலை 27ம் தேதி பிற்பகல் 2.45 மணி முதல் 28, 29ம் தேதி இரவு 10.41 மணி வரை.

மீனம்

வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான செயல்திறனும் கொண்ட நீங்கள், எப்போதும் கலகலப்பாக இருப்பவர்கள். கலை ஞானமும், கற்பனையும் கொண்ட நீங்கள், சிறந்த படைப்பாளிகள். ராசிநாதன் குரு உங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் அழகு, இளமைக் கூடும். தைரியமாக சவால்களை ஏற்றுக் கொள்வீர்கள்.

சூரியனும், செவ்வாயும் 5ல் நுழைந்திருப்பதால் உறவினர்களுடன் நெருடல்கள் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், பிரச்னைகளும், செலவினங்களும் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுக் குறையக்கூடும். எனவே இரும்புச் சத்து, நார் சத்துள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.

சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். 22ம் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

27ம் தேதி முதல் ராகு 5ல் அமர்வதால் பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை திணிக்க வேண்டாம். கேது லாப வீட்டில் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம், பணப்புழக்கம் உண்டு. அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை குறைக்கூறிப் பேச வேண்டாம். தலைமையை திருப்திபடுத்துவதற்காக பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களே! கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போது சிறுசிறுகாயங்கள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் உங்கள் கவனத்தையும், திறமையையும் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்ளாமல் முதலீடு செய்ய வேண்டாம். மற்றவர்களின் பேச்சை கேட்டு புதுத் துறையில் இறங்காதீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஓரளவு லாபம் கிடைக்கும். வேலையாட்களுடன் போராடி அவர்களிடமிருந்து வேலையைப் பெற வேண்டி வரும்.

அவர்களுக்கு முன் பணம் அதிகம் தர வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் வெடிக்கும். அவர்களுடன் ஈகோ வரக்கூடும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். மூத்த அதிகாரிகளைக் குறைக் கூற வேண்டாம்.

கலைத்துறையினரே! வீண் பழிக்கு ஆளாகுவீர்கள். பழைய சம்பள பாக்கியை போராடி பெற வேண்டி வரும். விவசாயிகளே! பக்கத்து நிலக்காரரிடம் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 20, 25, 26, 28 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 6, 7, 14, 16.

சந்திராஷ்டமம்: ஜூலை 29ம் தேதி இரவு 10.41 மணி முதல் 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 8.53 மணி வரை.

– அனைவருக்கும் பகிருங்கள்