இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க… இல்ல சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….

கொலஸ்ட்ரால் என்பது மெழுகுப் போன்ற ஒரு பொருள். இது இரத்தத்தில் உள்ள கொழுப்புச் செல்களில் காணப்படும். உடலினுள் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியமானதாகும். பொதுவாக நமது உடலில் சரிவிகித டயட்டை மேற்கொள்ளும் போது, நல்ல கொலஸ்ட்ரால் உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும். ஆனால் ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால், அது இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால் அதிகரிக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு 300 கிராமுக்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ராலை உட்கொள்ளக்கூடாது என உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அதனால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனைகள், இதய நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இக்கட்டுரையில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் சில இந்திய உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான நண்டு, இறால், கடல் சிப்பி போன்றவற்றில் ஏராளமான அளவில் கொலஸ்ட்ரால் இருக்கும். பெரும்பாலும் இவை எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தி சமைக்கப்படுவதால், இந்த உணவுப் பொருட்களை இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், அவர்களது நிலைமை மோசமாகிவிடும்.

வெண்ணெய்

பதப்படுத்தப்பட்ட வெண்ணெயில் ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. இவை ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தையும் உண்டாக்கும். எனவே இவற்றிற்கு பதிலாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெய்யை, அதுவும் அளவாக பயன்படுத்துங்கள். இதனால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு, உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். வேண்டுமானால், இதற்கு மாற்றாக சிக்கன் நெஞ்சுக் கறி அல்லது மீன் போன்ற கொலஸ்ட்ரால் குறைவான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். மேலும் உறைய வைக்கப்பட்ட இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், கோல்ட் கட்ஸ் மற்றும் பேகான் போன்றவற்றையும் தவிர்த்திடுங்கள். இவையும் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை சட்டென்று அதிகரிக்கும்.

ஃபாஸ்ட் புட்

ஃபாஸ்ட் புட் உணவுகளான பிட்சா, சீஸ், பிஸ்கட், பர்கர் மற்றும் சிப்ஸ் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் நிரம்பியுள்ளது. இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளது. குக்கீஸ், கேக்குகள், ப்ரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றில் ஹைட்ரோஜினேட்டட் வெஜிடேபிள் ஆயில் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களுள் முதன்மையானதாகும்.

சீஸ்

சீஸ்களில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. அதே சமயம் இந்த சீஸில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம் உள்ளது. 100 கிராம் சீஸில் 123 மிகி கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே நீங்கள் சீஸ் பிரியர் என்றால், இந்த சீஸை மிதமான அளவில் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், சீஸ் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடாதீர்கள்.

ஐஸ்க்ரீம்

அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் மிகவும் குளிர்ச்சியான உணவுப் பொருள் தான் ஐஸ் க்ரீம். இந்த ஐஸ் க்ரீம் ஹைட்ரோஜினேட்டட் வெஜிடேபிள் ஆயில் மற்றும் கொழுப்புமிக்க பாலால் தயாரிக்கப்படுவதாகும். இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். அதிலும் ஒருவர் இந்த ஐஸ் க்ரீமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை விரைவில் வந்துவிடும். எனவே கவனமாக இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதிகம் வாங்கிக் கொடுக்காதீர்கள்.

மாட்டு ஈரல்

100 கிராம் மாட்டு ஈரலில் 564 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இருக்கும் உணவுப் பொருட்களிலேயே அதிகளவு கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவுப் பொருள் என்றால், அது மாட்டு ஈரல் தான். எனவே மாட்டு ஈரல் உட்கொள்வதைக் குறைப்பது மட்டுமின்றி, தவிர்த்திடுங்கள். அதுவும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மாட்டிறைச்சி பக்கமே செல்லாதீர்கள். இல்லையெனில் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.

ஆல்கஹால்

மது அருந்துவதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தெரியுமா? இதன் விளைவாக இரத்த அழுத்த மற்றும் இதய நோய்களின் அபாயமும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? எனவே எப்போதும் மதுவை அளவாக குடியுங்கள். முடிந்த அளவு ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட தானிய பொருட்கள்

வெள்ளை பிரட், பாஸ்தா, மக்ரோனி, நுடூல்ஸ் போன்றவற்றில் சுத்திகரிக்ப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த உணவுகள் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதோடு, தமனிகளில் அடைப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கனோலா எண்ணெய்

கனோலா எண்ணெய் ட்ரான்ஸ் கொழுப்பு முழுமையாக நிறைந்த ஒரு ஹைட்ரோஜினேட்டட் எண்ணெயாகும். இந்த எண்ணெயை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிக்க நினைத்தால், கனோலா எண்ணெய், கார்ன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய்களைத் தவிர்த்திடுங்கள்.

மஃபின்கள்

மஃபின்கள் ஆரோக்கியமான காலை உணவாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. கடைகளில் விற்கப்படும் மஃபின்கள் சுத்திரிக்கப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றை உட்கொண்டால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். அதுவே வீட்டிலேயே கொழுப்புமிக்க பால், முட்டை மற்றும் சாக்லேட் சிப்ஸ் போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்டது என்றால், 2 மஃபினில் 8 கிராம் கொலஸ்ட்ரால் இருக்கும். இதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

பாப்கார்ன் ஆரோக்கியமானதா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பது தயாரிக்கும் முறையைப் பொறுத்தது. மைக்ரோவேப் பாப்கார்னில் வெண்ணெய், எண்ணெய் மற்றும் உப்பு போன்றவற்றைக் கொண்டிருக்கும். இவ்வாறான பார்ப்கார்ன் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். அதுவே வெண்ணெய், உப்பு எதுவும் சேர்க்காதது என்றால், கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது. மேலும் இது ஒரு சிறப்பான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

ப்ரைடு சிக்கன்

பார்த்ததும் பலரது வாயில் எச்சிலை ஊற வைக்கும் ஓர் ருசியான உணவுப் பொருள் தான் ப்ரைடு சிக்கன். பெரும்பாலானோர் ஹோட்டல்களுக்கு சென்றால், இம்மாதிரியான உணவுப் பொருளையே ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த ப்ரைடு சிக்கனில் முழுமையாக கொலஸ்ட்ரால் தான் நிரம்பியுள்ளது. இதனை சாப்பிட்டால், இதய நோய் சீக்கிரம் வருவது உறுதி. எண்ணெயில் பொரித்த ப்ரைடு சிக்கனுக்கு மாற்றாக ஆரோக்கியமான சிக்கன் ரெசிபியை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…