காலையில் எழுந்து இதை செய்வதால் இவ்வளவு நன்மைகளா? மன அழுத்தத்தை விரட்டும் காலை நேர உடற்பயிற்சி!

காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்பாக செய்யப்படுவது. காலை உணவிற்கு பிறகும், மதிய உணவிற்கு பிறகும் செய்வதை விட வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லதாகும். இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. ஆனால் காலை நேர உடற்பயிற்சி என்பது எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது, மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நமது மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறனை மேம்படுத்த இது உதவுகிறது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் தினமும் முறையான காலை உடற்பயிற்சியை செய்வதன் மூலமாக அல்சைமர் நோய்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

காலை வேளையில் உடற்பயிற்சியோடு சேர்த்து நடை, நடனம், யோகா ஆகிய அனைத்தையும் செய்யலாம். இது நமக்கு தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் மற்றும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும்.

காலை நேர உடற்பயிற்சி என்பது நமது ஹார்மோன்களை தூண்டி, நம்மை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட தினமும் காலை உடற்பயிற்சி செய்யலாம்.

காலை நேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள புத்துணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்ஃபின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றது. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.

காலை நேர உடற்பயிற்சி என்பது, வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தடுக்கிறது. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது.

தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு இரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து போகும், மேலும் அதிகமான இரத்தம் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இதனால் மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய இரத்த நாளங்கள் உருவாகின்றது.

ஒரு நாளைக்குக் குறைந்தது 10-50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம்.

காலை பொழுதே அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய மிகவும் சரியான நேரமாகும். காலையில் கவன சிதைவு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்காது. எனவே உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் காலை நேர உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…