உங்கள் பட்டுப்புடவை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நிறைய ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் பண்ணுவதை தவிர்க்கவும். அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும்.

பட்டுப்புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியது போலிருக்கும்.

துவண்டு போயிருக்கும் பட்டு அல்லது பிரின்டெட் பட்டுப்புடவைகளுக்கு புத்துயிரூட்ட அரை பக்கெட் குளிர்ந்த நீரில் 1 டீஸ்பூன் சாதாரண கோந்து கலக்கவும். துவைத்த புடவையை இந்த நீரில் அமிழ்த்தி எடுத்து உலர்த்தவும்.

மழைக்காலத்தில் பீரோவுக்குள் ஈரக்காற்று இருப்பதால் பட்டுப்புடவைகள் மொரமொரப்பு இழந்து தொய்வாகக் காணப்படும். இதைத் தவிர்க்க 10 சாக்பீஸ்களை ஒரு நூலில் கட்டி பீரோ உள்பகுதியில் மேலே கட்டித் தொங்க விடுங்கள். இது பீரோவின் உள்ளே இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து விடும்.

பட்டுப்புடவையை மாதத்திற்கு ஒரு முறை மடித்து வைத்ததற்கு எதிர்பக்கமாக மடித்து வைக்க வேண்டும். கறை ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு கறையை நீக்கி விட்டு உலர்த்தி எடுங்கள்.

மலிவு விலையில் கிடைக்கும் வெள்ளை நிற பருத்தித் துணியில் பைகளாக தைத்து அதில் பட்டுப்புடவைகளைப் போட்டு பராமரிக்கலாம். ஜரிகை கறுக்காமல் இருக்கும். பிரயாணத்தின் போது எளிதாகவும், சௌகரியமாகவும் கொண்டு செல்லவும் உதவும்.

பட்டுப்புடவைகளை அடித்து பிரெஷ் போட்டு துவைக்கக் கூடாது. முதலில் அலசும் போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு நீண்டநாள் உழைக்கும்.

5 அல்லது 6 கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டை போல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப்புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

எல்லா பட்டுப்புடவைகளையும் 6 மாதத்துக்கு ஒரு முறையாவது ஒரு நாள் முழுவதும் காற்றாட காய விட்டு வேறுவிதமாக மடித்து வைக்க வேண்டும். இதனால் புடவை மக்கிப் போகாமல் இருக்கும்.

பட்டுப்புடவையை அயர்ன் செய்யும்போது மட்டும் புடவை மேலே ஒரு வேஷ்டி போட்டுத்தான் அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் பண்ணுவதை தவிர்க்கவும்.

எவ்வளவோ செலவு செய்து பட்டுப்புடவைகள் வாங்கற கையோடு அக்குளுக்கும் சேர்த்து ‘ஸ்வெட் பேட்’ கேட்டு வாங்குங்க. பட்டுப்புடவையின் ப்ளவுசில் வியர்வையின் கறை தெரியாமல் இந்த பேட் பார்த்துக் கொள்ளும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…