‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன?

‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன? நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் அக்‌ஷயதிரிதியை அன்று கடைக்குப் போய் நகை வாங்குவதுதான். ‘அக்‌ஷய திரிதியை’ அன்று நகை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பொங்கும் என்றொரு நம்பிக்கை. இது சரியானதா?

முதலில் ‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்னவென்று பார்ப்போமே. ‘அக்‌ஷய’ என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்‌ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு. மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் ‘அட்ஷய பாத்திரம்’ கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

‘திரிதியை’ என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். ‘அக்‌ஷய’ என்பது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.

வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். ‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது.

எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

வைகாசி மாதம், சுக்லபட்சம் திருதியை திதியில் விரதத்தை கடைபிடித்து எண்ணெய் தேய்த்து நீராடுதலை தவிர்த்தல் என்பது விதி. ஆனால் இந்த தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து விஷ்ணுவை நினைத்து வழிபட வேண்டுமென்பது ஐதீகமாக உள்ளது. அட்ஷய திருதியை தினத்தன்றுதான் இறைவன் விஷ்ணு அக்‌ஷய பாத்திரத்தை திரவுபதிக்கு கொடுத்தார் என்பதால், இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் மேலும் பெருகும் என்பது சமீபகாலமாக சம்பிரதாயமாகி விட்டது.

– அனைவருக்கும் பகிருங்கள்