சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடை ஏன் குறைகிறது?

லேசாக உடல் எடை குறைந்தாலே, “சுகராக இருக்குமோ” என்ற அச்சம் எல்லோருக்கும் வந்து விடுகிறது. சர்க்கரை நோய் என்றால் உடல் எடை குறையும் என்பது இயல்பான கருத்தாக மாறிவிட்டது. அது உண்மைதான் என்றாலும், உடல் எடை ஏன் குறைகிறது என்பது பலருக்குத் தெரியாது.

நாம் உண்ணும் உணவுகளில் மூன்று வகையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து. இதில் மாவுச்சத்தில் தான், நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் அதிகமாக இருக்கிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும்போது கணையத்தில் இன்சுலின் உற்பத்தி ஆகிறது.

இன்சுலின் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் குளுக்கோஸை எடுத்துச்செல்கிறது. செல்கள் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கின்றன.

சர்க்கரைக் குறைபாடு என்றால் என்ன?

நம் வீட்டின் கதவைத் திறப்பதற்கு ஒரு சாவி இருப்பதுபோல் செல்களில் குளுக்கோஸை உள்ளிழுத்துக் கொள்வதற்கு வாங்கிகள் (Receptors) இருக்கின்றன. இந்த வாங்கிகள் அனுமதித்தால் மட்டுமே குளுக்கோஸ், செல்களுக்குச் செல்ல முடியும். சர்க்கரை பாதிப்புள்ளவர்களின் செல்களில் உள்ள வாங்கிகள் (Receptors) செயல்படாமல் இருக்கும். அதனால் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் பழையபடி ரத்தத்திலேயே கலந்துவிடும்.

ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 180 மி.கிராமுக்குமேல் அதிகரித்தால், எனர்ஜியாக மாறாமல் சிறுநீராக வெளியேறும். நம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்காததாலும் குளுக்கோஸ் சிறுநீருடன் வெளியேறி விடுவதாலும் தான் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது.

எடை குறைவதற்கான முக்கியமான காரணிகள்:

  • அதிகமான பசி (Polyphagia)
  • தாகம் (Polydipsia)
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria)

சர்க்கரை நோயின் வகைகள்:

டைப் 1 டயாபட்டீஸ்: டைப் 1 டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு உடலில் இன்சுலின் உற்பத்தியே இருக்காது. முழுமையாக அழிந்து போயிருக்கும். இந்த வகை பாதிப்புள்ளவர்கள் சிறுவயதில் ஏதேனும் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்கள். அப்போது தீங்குசெய்யும் பாக்டீரியாக்களை அழிப்பதற்காக அவர்களின் உடலில் இயற்கையாகவே ஆன்டிபயாட்டிக் உருவாகியிருக்கும். அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்காமல், இன்சுலின் உற்பத்தி செய்யக்கூடிய பீட்டாசெல்களை அழித்திருக்கும். அதன் காரணமாகச் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும். குறிப்பாக எதிர்ப்பு சக்தி அபிவிருத்தி ஆகும் வயதில் இந்த பாதிப்பு உண்டாகும். இதற்கு ‘ஆட்டோ ஆன்டி பாடி மெக்கானிசம்’ (Auto Anti Body Mechanism) என்று பெயர். அதாவது நம் உடலே நமக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது. இந்த நிலையில் இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொண்டால் மட்டுமே தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்.

டைப் 2 டயாபட்டீஸ்: 35-40 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு வரக்கூடியது. தாய் தந்தையருக்கு டயாப்பட்டீஸ் இருந்தால் பிள்ளைகளுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமின்றி தவறான உணவுப் பழக்கத்தின் மூலமாகவும் இது வரலாம். அதிகமான கலோரி உள்ள உணவுகள் உண்பது. எடுத்துக்கொண்ட உணவுகளுக்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாமல் போவது, தினமும் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது. உயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிக்காமல் இருப்பது போன்ற காரணங் களாலும் இப்பாதிப்பு உருவாகலாம். பொதுவாக இந்திய ஆண்களின் தொப்பையின் அளவானது 90 செ.மீட்டருக்கும் பெண்களின் தொப்பை 80 செ.மீட்டருக்கும் குறைவாகவே இருக்க வேண்டும். இந்த அளவைவிட அதிகரித்தால், செல்களில் இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) அதிகரிக்கும். செல்களுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்காது. இதனால் சர்க்கரை பாதிப்பு உண்டாகும்.

எப்படிக் கண்டறிவது?

ஒருவருக்குச் சர்க்கரை இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் ‘குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ (Glucose Tolerance Test) எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளை வைத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

எப்படிச் சரிசெய்வது?

நம் உடலில் சர்க்கரைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் ‘கிளைசெமிக் இ்ண்டெக்ஸ்’(Glycemic Index) குறைவாகவுள்ள உணவாக உட்கொள்ள வேண்டும். அரிசி, மைதா, சீனி போன்ற வெள்ளை நிற உணவுப் பொருள்கள் அனைத்தும் அதிகமான கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளவை. இவற்றில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருக்கும். காய்கறிகள், ஆப்பிள், பப்பாளி, சாத்துக்குடி, கொய்யாப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடலாம். டயாப்பட்டீஸ் என்பது நோய் அல்ல ஒரு குறைபாடு. சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவும் உடற்பயிற்சிகள் மூலமாகவும் இதை எளிதாகக் கட்டுப்படுத்தி நலமோடு வாழலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!