இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஆரோக்கியத்தின் மீது மக்களுக்கு இத்தனை தீவிரமான தேடல் ஏன்?

கடற்கரையில் காலாற நடந்துவிட்டு அருகம்புல் சாறு குடித்தபடியே பேசிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். வாண்டுகள் முதல் வயதானவர்கள் வரை நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் தீவிர நடைபயிற்சியில் இருக்கிறார்கள். வேலைக்குப் போகிற வழியில் சில நிமிடங்கள் உடற்பயிற்சிக் கூடத்துக்குள் நுழைந்து, வியர்வை வழிய வெளியே வருகிறார்கள் இளைஞர்கள். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு எடை குறைக்கும் பயிற்சியில் இறங்கிவிடுகிறார்கள் இல்லத்தரசிகள். நாற்பதுகளில் அடியெடுத்து வைத்தவர்கள், வாழைத்தண்டு சாறையும் பாகற்காய் பச்சடியையும் பல்லைக் கடித்துக்கொண்டுச் சாப்பிடுகிறார்கள். கல்லூரிப் பெண்களை கிரீன் டீயுடன் பார்க்க முடிகிறது. வீதிக்கு ஒரு உடற்பயிற்சிக்கூடமும், எடையைக் கூட்டியோ குறைத்தோ தருவதற்கு உத்தரவாதம் அளிக்கும் விளம்பரங்களும் காணக் கிடைக்கின்றன. எதைச் செய்தாவது உடம்பைக் கட்டுக்கோப்புடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுகள்தான் இவை.

இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஆரோக்கியத்தின் மீது மக்களுக்கு இத்தனை தீவிரமான தேடல் ஏன்? அதற்குக் காரணமும் நாமேதான்.

உடல் பருமனால் அவதிப்படுகிற வர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடி வருகிறது. முன்பெல்லாம் ஆண், பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பு வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்ததும் சற்றே பூசினாற்போல மாறிவிடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகச் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள் அதிக உடல் எடையுடனும் ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாகத் தவிர்த்துவிடுவது… இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாள்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகளை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

குழந்தைகளின் உடல் பருமனுக்குப் பின்னால் உணவுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு விளையாட்டுக்குத்தான். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளைப் பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.

உடல் பருமனைக் குறைப்பதாகச் சொல்லி தாங்களே மருத்துவர்களாகிவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்த வீட்டில் சொன்னார்கள், அனுபவப்பட்டவர்கள் பரிந்துரைத்தார்கள் என்று தினம்தினம் புதுப்புது எடைகுறைப்பு பயிற்சிகளில் இறங்குகிறவர்கள், நிச்சயம் வீட்டுக்கு ஒருவராவது இருக்கிறார்கள்.

கல்லூரிப் பெண்களோ ஜீரோ சைஸ் இடையழகுக்கு ஆசைப்பட்டுப் பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு? அனோரெக்ஸியா எனப்படும் உடல் மெலிவுப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

சிலர் தங்களுக்குப் பிடித்த உணவு களை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிக ரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!