முட்டை ஓட்டை இப்படி எல்லாம் யூஸ் பண்ணலாமா?

அனைவருக்குமே முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் அனைத்து வீடுகளிலுமே முட்டையானது நிச்சயம் இருக்கும். ஏனெனில் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்களின் அறிவுரையால் பலர் முட்டைகளை தினந்தோறும் சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம்.

அவ்வாறு சாப்பிடும் போது, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு விடுவோம். இல்லையெனில், அதனை எறும்புகள், கரப்பான் பூச்சிகள், பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு வீட்டினி மூலையில் வைப்போம். ஆனால் அந்த முட்டை ஓடானது அத்தகைய பூச்சிகளை மட்டும் விரட்ட பயன்படுவதில்லை. இன்னும் வேறு பல செயல்களுக்கும் பயன்படுகிறது. எனவே அடுத்த முறை முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும் போது, அதன் ஓட்டை வெளியே தூக்கிப் போடாமல் சேகரித்து வைத்து, கீழே குறிப்பிட்டுள்ளபடி பயன்படுத்தி பாருங்கள். சரி, அது என்னவென்று பார்ப்போம்.

வளமான மண் : முட்டையின் ஓடு, தோட்டத்தில் உள்ள மண்ணை வளமானதாக்குவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் முட்டையின் ஓட்டில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதனை பொடி செய்து, தோட்டத்து மண்ணில் தூவினால், மண்ணானது வளமானதாகும்.

விதை விதைக்க : தோட்டத்தில் விதையை விதைக்கும் முன், அந்த விதையை முட்டையின் ஓட்டில் வைத்து நடலாம். குறிப்பாக அவ்வாறு நடும் முன், விதை முளைப்பதற்கு முட்டையில் சிறிய ஓட்டையை போட வேண்டும். இதனால் விதையானது நன்கு ஆரோக்கியமானதாக வளரும்.

அடைப்புகள் : முட்டையின் ஓட்டைக் கொண்டு, சமையலறைக் குழாயில் உள்ள அடைப்புக்களை போக்க முடியும். அதற்கு முட்டையின் ஓட்டை பொடி செய்து, இரவில் தூங்கும் முன் குழாயில் தூவி விட்டு, பின்னர் அதில் சிறிது வினிகரை ஊற்றினால், நல்ல பலன் கிடைக்கும்.

செல்லப் பிராணிகளின் உணவு : முட்டையின் ஓட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், நாய்கள் சாப்பிடும் உணவுகளில் முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவி கொடுத்தால், நாய்க்கு ஊட்டச்சத்துமிக்க உணவாக இருக்கும்.

பூச்சிக்கொல்லி : காய்கறி மற்றும் பழச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு, அந்த செடியைச் சுற்றி, முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், பூச்சிகள் வராமல் இருப்பதோடு, செடியும் நன்கு வளமாக வளரும்.

பாத்திரங்கள் : பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு, முட்டையின் ஓட்டை பொடி செய்து, வினிகர் ஊற்றி, அந்தக் கலவைக் கொண்டு, பாத்திரங்களை தேய்த்து கழுவினால், பாத்திரங்கள் நன்கு பளபளக்கும்.

சரும பராமரிப்பு : முட்டையின் ஓட்டை பொடி செய்து, முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பொலிவுடன் மின்னும்.

காபி : பொடியில் செய்த காபியானது சற்று கசப்புடன் இருக்கும். எனவே காபி போடும் போது கசப்பை குறைத்து இனிப்பை அதிகரிப்பதற்கு, காபி போடும் முன், முட்டையின் ஓட்டை நன்கு பொடியாக்கி காபி பொடியுடன் சேர்த்து கலந்து, பின் காபி போட்டுக் குடித்தால், கசப்புச் சுவை குறைந்து, காபி இன்னும் சுவையாக இருக்கும். குறிப்பாக, இந்த முறையில் நிச்சயம் முட்டையின் நாற்றம் வராது.

– அனைவருக்கும் பகிருங்கள்