பெண்கள் மிகவும் விரும்பும் மூங்கில் ஆபரணங்கள்!

அணியும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப அணிகலங்களை அணிந்து அழகுபார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வண்ணம் பேஷன் நகைகள் விதவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடன் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.

உலோகங்கள், பிளாஸ்டிக், டெரகோட்டா, காகிதம், ஸ்டோன், முத்து, குந்தன், சணல், மரத்துண்டு, பித்தளை, பேப்ரிக், கிரிஸ்டல் உள்ளிட்ட பலவகையான மூலப்பொருட்களில் பேஷன் நகைகள் மங்கையரை கவரும் நேர்த்தியுடன் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மூங்கில் ஆபரணங்களும் இணைந்திருக்கின்றன.

தங்க நகைகள் மீது பெண்களுக்கு மோகம் அதிகம். இருந்த போதிலும் இளம் பெண்கள் உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமான தேர்வாக பேஷன் நகைகளையே நாடுகிறார்கள். இவற்றில் ஒருசில நகைகள் அணிந்தாலே போதும். பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும். அழகாகவும் இருக்கும். அவர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மூங்கில் ஆபரணங்களை வடிவமைக்கப்படுகின்றன.

எடை குறைவான பேஷன் நகைகளை அணிவதற்குத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவை பார்ப்பதற்கு பெரியதாக தெரிய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கு மூங்கில் ஆபரணங்கள் பொருத்தமான தேர்வாக இருக்கும். நன்கு உலர்த்தப்பட்ட மூங்கில்களை கொண்டு உருவாக்கப்படுவதால் எடைகுறைவாகவே இருக்கும்.

ஒருசில உலோகங்களில் தயாராகும் பேஷன் நகைகள் பெண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். சில நாட்களிலேயே பொலிவை இழந்து போய்விடும் பேஷன் நகைகளும் இருக்கின்றன. அத்துடன் பெரும்பாலான நகைகள் மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

ஆனால் மூங்கில்கள் இயற்கையாகவே சுற்றுச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் நன்மை விளைவிக்கக்கூடியவை. கீழே விழுந்தாலும் உடையாது. மூங்கில் ஆபரணங்களை அணிவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தலாம். அவை பொலிவை இழக்காமல் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

-அனைவருக்கும் பகிருங்கள்