விநாயக சதுர்த்திக்கு விதவிதமான கொழுக்கட்டை செய்யலாம் வாங்க!

By | August 25, 2017

விநாயக சதுர்த்திக்கு வழக்கம் போல அரிசி கொழுக்கட்டை செய்து விநாயகரை போர் அடிக்காமல் விதவிதமான கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படையல் போடுங்கள்

1. பூரண கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

  • கடலைப்பருப்பு-200 கிராம்,
  • வெல்லம் -கால் கிலோ,
  • தேங்காய் துருவல்-அரை கப்,
  • ஏலைக்காய்த் தூள்-சிறிதளவு,
  • உப்பு -சிறிதளவு,
  • நெய்-2 ஸ்பூன்,
  • எண்ணெய்- சிறிதளவு,
  • துவரம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்,
  • மேல் மாவிற்கு பதப்படுத்திய அரிசி மாவு.

எப்படி செய்வது?

கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்றாகச் களைந்து, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வேக விடவும். நெத்துப் பதத்தில் வேகவிடவும்.வடிகட்டி வெல்லத்துடன் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தளர்த்தியாகத்தான் இருக்கும். கடாயில் சிறிதளவு நெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுது, தேங்காய் துருவல் போட்டுக் கலக்கவும். சிறு சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதித்ததும், 1 சிட்டிகை உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விடவும். தளதளவென்று கொதித்ததும்,அரிசி மாவைக் கொட்டிக் கிளவும். நன்றாக வெந்ததும் தேய்த்துப் பிசைந்து, ஈரத் துணியால் முடி வைக்கவும். சிறிதளவு அரிசி மாவு எடுத்துச் சொப்புப் போல(எண்ணெய் தொட்டு) செய்து, உள்ளே பூரணத்தை வைத்து முடவும். மேலே கூம்பு போல செய்ய வேண்டும். இது தான் மோதகம்.

குறிப்பு: வெல்லம் எவ்வளவு வேண்டுமோ அதைச் சேர்க்கவும். அதிகமாகி விட்டால் பூரணம் கெட்டியாக இருக்காது.

2. எள்ளுக் கொழுக்கட்டை

எப்படி செய்வது?

கறுப்பு எள்ளைச் சுத்தம் செய்து, கல் இல்லாமல் அரித்து, வடியவிட்டு உலர்த்தவும். நன்றாகக் களைந்து மேல் தோல் நீக்கி விடவும். பிறகு காய விடவும். காய்ந்த பிறகு சூடான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். படபடவென்று வெடிக்கும். அதற்கு எத்தனைவெல்லாம் தேவையோ, அதைப் பொடி செய்து மிக்ஸீயில் ஒரு சுற்றுச் சுற்றவும். பொடியாகி விடும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். 1 டீஸ்பூன் நெய் விட்டுக் கிளறி வைக்கவும். உதிராக இருக்க வேண்டும்.

3. உப்புக் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

  • துவரம் பருப்பு-200 கிராம்,
  • மிளகாய் வற்றல்- 6,
  • இஞ்சி- சிறிதளவு,
  • உப்பு- தேவையானது,
  • தேங்காய்த் துருவல்கால் – கப்,
  • பெருங்காயம்- 1 துண்டு,
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு,
  • காரட் 2 சீவியது-அரை கப்,
  • அரிசி மாவு- தேவையானது

எப்படி செய்வது?

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளைப் போட்டுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் அதற்குத் தேவையான தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து போட்டுப் புரட்டி,இஞ்சித் துருவல் சேர்த்து, அரைத்த மாவை, அதில் போட்டு நன்றாகக் கிளறவும். கறிவேப்பில்லை, கோத்தமல்லி, காரட் துருவல் போட்டு புரட்டவும். இரண்டும் நன்றாக வெந்துவிடும். உதிராக இருக்க வேண்டும்.பதப்படுத்திய அரிசி மாவை, கிளறி(அதற்கு சிறிது உப்பு சேர்த்து) ஆற விடவும்.(எல்லா மாவும் தயாரிப்பது போல் தான் இருக்கும்).

எண்ணெய் அல்லது நெய் சிறிதளவு தொட்டு, சிறு உருண்டை மாவை பிளாஸ்டிக் பேப்பரில் போளி தடடுவது போல சிறிய வட்டமாகச் செய்யவும். அதில் ஆறிய பருப்புக் கலவையை வைத்து கீழிருந்து மேலாக மூடவேண்டும். மேலே சிறிதளவு தொட்டு,சிறு உருண்டை மாவை பிளாஸ்டிக் பேப்பரில் போளி தட்டுவது போல சிறிய வட்டமாகச் செய்யவும். அதில் ஆறிய பருப்புக் கலவையை வைத்து கீழிலிருந்து மேலாக மூட வேண்டும். மேலே சிறிதளவு தண்ணீர் தொட்டு ஒரத்தை ஒட்டி விடவும். எல்லாவற்றையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் இலை போட்டு வேக விடவும். சில நிமிடங்களில் நன்றாக வெந்துவிடும். கலர் சிறிது மாறியிருக்கும். இவை ரொம்ப ருசியாகவும், மணமாகவும் இருக்கும். காய் சேர்த்து இருப்பதால் குழந்தைகள் விரும்புவார்கள். இது மாறுதலாக செய்யும் ஒரு மோதகம்!

குறிப்பு: இந்த மாதிரி பட்டாணி, முட்டைக்கோஸ் இவற்றை வைத்தும் செய்யலாம்.

4. கொத்துக்கடலைச் சுண்டல்

எப்படி செய்வது?

கருப்புக் கொண்டக்கடலை-கால் கிலோ எடுத்து முதல் நாள் இரவே ஊரப் போடவும். விசேஷத்தன்று காலையில், ஊறிய கடலையை 5,6 விசில் விட்டு குக்கரில்(மூழ்கும் அளவு தண்ணீர்) வேகவிடவும். குழைய வேண்டாம். அதிலிருக்கும் தண்ணீரை வடிக்கட்டி, உப்பு போட்டு வைக்கவும். தேங்காய்-2 டேபிள் ஸ்பூன், தனியா-1 ஸ்பூன், இஞ்சி-1 துண்டு,மிளகாய் வற்றல்-4 இவைகளை மைய அரைத்த விழுதைப்போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும் வேக வைத்த கொத்துக் கடலையைப் போடவும். நன்றாக கிளறவும். மேலே கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு. ஆறியதும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டுப் புரட்டி எடுக்கவும். இது ருசி மிக்க ஒரு சுண்டல் வகை.இதில் புரதச்சத்து அதிகம். பழைய காலத்தில் இதை அடிக்கடி சுண்டல் செய்வார்கள்.கூட்டிற்க்கு போடுவார்கள்.

5. உளுந்தம் பருப்பு கொளுக்கட்டை

என்னென்ன தேவை?

  • பச்சரிசி மாவு- 1கப்
  • உருட்டு உளுந்தம் பருப்பு- 1/4கப்
  • மிளகாய் வத்தல்-3 அல்லது காரத்திற்கேற்ப
  • பெருங்காயத்தூள்-சிறிதளவு
  • உப்பு -தேவையான அளவு
  • நல்லெண்ணெய்-2டீஸ்பூன்
  • கடுகு-சிறிதளவு
  • கருவேப்பிலை-சிறிதளவு
  • மல்லிக்கீரை-சிறிதளவு

எப்படி செய்வது?

உருட்டு உளுந்தம் பருப்பை 15நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் பருப்பை தண்ணீர் விடாமல் பரபர என கிரைண்டரில் அரைக்க வேண்டும். அரைத்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10நிமிடம் வேகவைக்க வேண்டும். வேகவைத்த மாவை நன்றாக ஆறவைத்து உதிர்த்துக்கொள்ளவேண்டும். வத்தல், உப்பு, பெருங்காயத்தூள், ஆகியவற்றை நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் பொடியாக்கிய கலவையும் வேகவைத்த உளுந்தமாவையும் போட்டு மசாலா கலவை சேரும் வரை கிளறி ஆறவைத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பின்னர் பச்சரிசி மாவை வெந்நீர்விட்டு கொழுக்கட்டை பதம் வரும் வரை பிசைந்து அந்த மாவுக்குள் உருட்டி வைத்த உருண்டைகளை உள்ளே வைத்து வேகவைத்தால் சுட சுட உளுந்தம் பருப்பு காரகொழுக்கட்டை தயார். இதனை ஒரு தட்டில் வைத்து மல்லிக்கீரை தூவி பறிமாறவேண்டும்.

6. பலாச்சுளை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி – ஒரு பெரிய கப்,
பால் – 1/2 கப்.

பூரணத்திற்கு:

  • தேங்காய் – 1 சிறியது,
  • வெல்லம் – 150 கிராம்,
  • பலாச்சுளை – 10 பொடியாக நறுக்கியது,
  • ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்,
  • நெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின் சலித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை வெந்நீரில் கரையவிட்டு வடிகட்டவும். வடிகட்டின வெல்லத்தை பாகு காய்ச்சி, பொடியாக நறுக்கிய பலாச்சுளை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் போட்டு கை விடாமல் கிளறுங்கள். இந்த கலவை சுருளாக வரும்போது இறக்கி ஆறவிடவும். பின் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பின் அதன் மேல் காய்ச்சிய பால், கொதிக்க வைத்த தண்ணீர் 1 கப், நெய் சேர்த்து ஊற்றி கைவிடாமல் கிளறி மூடிவைத்து, பின் மாவில் இருந்து சிறு சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு : விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை செய்யலாம். பால் சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும், வெண்மையாகவும் இருக்கும். வேறு வேறு பூரணம் கொண்டும் செய்யலாம். (முந்திரி- சர்க்கரை, கடலைப்பருப்பு-வெல்லம், எள்ளு-வெல்லம்)

7. கடலைபருப்பு கொழுக்கட்டை

என்னனென்ன தேவை?

  • கடலை பருப்பு- 250கிராம்
  • தேங்காய்-அரைமுறி
  • ஏலக்காய்-4
  • பச்சரிசி மாவு- 250 கிராம்

எப்படி செய்வது?

கடலை பருப்பை நன்றாக வேகவைத்து அதனை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி பாகு எடுக்க வேண்டும். பாகை கடலைப் பருப்புடன் ஊற்றி தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாக கிளற வேண்டும். பின்னர் பச்சரிசி மாவுடன் சிறிதளவு வெந்நீர் சேர்த்து பிசைந்து மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்க வேண்டும். பின்னர் அந்த உருண்டையை நன்றாக தட்டி அதில் பூரணத்தை வைத்து வேகவைத்தால் கடலைப்பருப்பு கொழுக்கட்டை தயார்.

8. புரோட்டீன் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

  • பச்சரிசி மாவு -1கப்
  • சோயா பீன்ஸ்-1/2கப்
  • கடுகு-1/2டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு-1டீஸ்பூன்
  • கடலை பருப்பு-1டீஸ்பூன்
  • இஞ்சி-சிறிய துண்டு
  • மிளகாய்-4
  • கறிவேப்பிலை- சிறிது
  • பெருங்காயத்தூள்- 1சிட்டிகை
  • தண்ணீர் 1 1/2 கப்
  • எண்ணெய் 4 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

எப்படி செய்வது?

சோயா பீன்சை ஊறவைத்து ரவை போல அரைக்க வேண்டும். அதனுடன் இஞ்சி, மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அரைத்த கலவையை கலக்க வேண்டும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு நன்றாக வறுக்க வேண்டும். அப்போது அதனுடன் பெருங்காயத்தூளையும் சேர்க்க வேண்டும்.

பின்னர் அரைத்த சோயா பீன்ஸ், விழுதை சேர்த்து கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து கிளறவேண்டும். இது தான் பூரணம் பின்னர் அரைத்த சோயா கடாயில் தண்ணீர் விட்டு சிறிது உப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவேண்டும். அதில் பச்சரிசி மாவை தூவி கட்டி இல்லாமல் கிளறி எடுக்க வேண்டும். மாவு ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு அரிசிமாவில் எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து அதில் தயார் செய்த பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்க வேண்டும். அதை வேக வைத்து எடுத்தால் புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.

9. கசகசா பேரீட்சை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

  • பச்சரிசி மாவு-1கப்
  • பேரீச்சம் பழம்- 1/2கப்
  • கசகசா-2டேபிள்ஸ்பூன்
  • நாட்டுசர்க்கரை-சிறிதளவு
  • தேங்காய் துருவல்-2டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய்-4
  • உப்பு-தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் பேரிச்சம் பழம் நாட்டு சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீரில் வேக விட்டு பிசைந்து எடுத்து கெட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் வறுத்த கசகசா ஏலக்காய்தூளை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் பச்சரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இளம் சூடான வெந்நீரை ஊற்றி ஏற்கனவே கெட்டியாக வைத்துள்ள கலவையில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை எடுத்து கையில் வைத்து அழுத்தி லேசாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து இலையின் ஓரத்தை மூடி பின்பு திறந்து அதே வடிவத்துடன் இட்லி சட்டியில் வைத்து வேக வைத்து எடுத்தால் கசகசா பேரிச்சம் கொழுக்கட்டை தயார். மற்ற கொழுக்கட்டைகளை விட இதில் பேரீட்சை சேர்த்துள்ளதால் தேவையான இரும்பு சத்தும் வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

10. திரளி இலை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

  • பச்சரிசி
  • அச்சுவெல்லம்
  • தேங்காய்
  • ஏலக்காய்
  • 5 திரளி இலை

எப்படி செய்வது?

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் துருவல், அச்சுவெல்லம், ஏலக்காய், கலந்து நன்றாக கிளறி பூரணத்தை தயார் செய்ய வேண்டும். திரளி இலையை கோள் வடிவம் செய்து பூரணத்தை அதில் வைத்து இட்லி பானையில் வேகவைக்க வேண்டும். வேகவைத்து எடுத்தால் திரளி இலை கொழுக்கட்டை தயார்.

உங்க Friends & Groups kku Share பன்னுங்க…

Loading...