ஏன் உணவு உண்டதும் டீ குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

ஆயுர்வேதம் என்பது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஓர் இந்திய மருத்துவ முறையாகும். இந்த மருத்துவ முறையினால் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபத்தை நடுநிலையாக பராமரித்து, மனம், உடல் மற்றும் ஆத்மாவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுர்வேத டயட்டை எடுத்துக் கொண்டால், நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுக் கலவைகள் மிகவும் தவறானது. இதனால் உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தவறான உணவு கலவைகளாக ஆயுர்வேதம் கூறுபவைகளை பட்டியலிட்டுள்ளது.

உணவுக்கு பின் டீ

உணவு உட்கொண்ட பின் பலரும் செரிமானமாக வேண்டுமென்று டீ குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், அது அஜீரண கோளாறைத் தான் உண்டாக்கும். வேண்டுமானால், பால் டீக்கு பதிலாக, க்ரீன் டீயை 1/2 டம்ளர் குடிக்கலாம்.

உணவின் போது ஜூஸ்

உணவை உட்கொள்ளும் போது, ஜூஸ் குடிக்கும் பழக்கமும் மிகவும் மோசமானது. ஏனெனில் இப்படி செய்யும் போது, உண்ணும் உணவில் உள்ள புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்களை செரிக்க உதவும் நொதிகள் நீர்க்கப்படும். ஜூஸ் குடிக்க சிறந்த நேரமென்றால், உணவு உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தான்.

தயிர் மற்றும் எண்ணெய் பலகாரங்கள்

தயிருடன் எண்ணெய் பலகாரங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த காம்பினேஷன் உடலால் கொழுப்புக்களை உடைக்கும் திறனைக் குறைத்து, உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் பருமனை அதிகரித்துவிடும்.

ஜங்க் ஃபுட் மற்றும் குளிர்பானங்கள்

இந்த காம்பினேஷன் உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புக்களின் அளவையும் அதிகரிக்கும். இறுதியில் உடல் பருமனையும் அதிகரித்துவிடும்.

பால் மற்றும் சாக்லேட்

பாலுடன் சாக்லேட் சேர்த்து சாப்பிடும் போது, சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகளை பால் உறிஞ்சவிடாமல் தடுக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மற்றபடி இதனால் எவ்வித கேடும் இல்லை.

உணவு உட்கொண்ட பின் இனிப்புகள்

சிலருக்கு உணவு உட்கொண்ட பின் இனிப்புக்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் மோசமானது. ஏனெனில் இது உடலில் கொழுப்புக்களை செரிமானமாவதைக் குறைத்து, உடல் எடையை அதிகரிக்கும்.

மட்டன் மற்றும் உருளைக்கிழங்கு

மட்டனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் விலங்கு புரோட்டீனுடன், கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்து சாப்பிடும் போது, வயிற்றில் செரிமான அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கப்பட்டு, அசிடிட்டியை உண்டாக்கும்.

உணவுக்குப் பின் பழங்கள்

உணவு உட்கொண் பின் பழங்களை சாப்பிட்டால், செரிமானம் சரியாக நடைபெறாமல், உடலில் நீண்ட நேரம் சர்க்கரை நீடித்து நொதித்துவிடும்.

உணவுக்கு பின் நீர்

உணவு உட்கொண்ட உடனேயே நீரை வயிறு நிறைய குடிக்கக்கூடாது. குறைந்தது 1/2 மணிநேர இடைவெளியாவது கொடுக்க வேண்டியது அவசியம். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.

-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்