பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சாய்பாபா!

நம்பிக்கையோடு என்னிடம் கேளுங்கள், பொறுமையாக காத்து இருங்கள், நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைத்தது நீடித்து நிலைக்கும் என்று சாய்பாபா அடிக்கடி பக்தர்களிடம் சொல்வார்.

சில பக்தர்களிடம் அவர், சிரத் (நம்பு) சபுரி (காத்திரு) என்று மிக சுருக்கமாக சொல்வதுண்டு. அவரது இந்த அறிவுறுத்தலை நம்பியவர்கள் அளவிலா பலன் அடைந்தனர்.

நம்பாதவர்கள் கால தாமதமாக சீரடி சாய்பாபாவின் மகிமையை உணர்ந்தனர். பாபாவை நம்பி இருந்தால் பலனை அறுவடை செய்து இருக்கலாமே என்று பின்னாட்களில் அவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். இதற்கு ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன.

ஒரு தடவை பிராமணர் ஒருவர் சாய்பாபாவைப் பார்க்க சீரடிக்கு வந்தார். துவாரகமாயி மசூதிக்குள் சென்ற அவர் பாபாவைப் பார்த்ததும், இந்த துறவியால் எப்படி தனக்கு உதவ முடியும் என்று அவநம்பிக்கைக் கொண்டார். பாபா அவரிடம், ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார். அதற்கு அந்த பிராமணர், தான் மிகவும் கஷ்டப்படு வதாகவும் தனது கஷ்ட நிலையை போக்க வேண்டும்’’ என்றும் பாபாவிடம் கூறினார்.

சிறிது நேரம் யோசித்த பாபா, ‘‘சரி…. இருங்கள் வருகிறேன்’’ என்று கூறி மசூதியின் ஒரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு பொட்டலத்தில் இறைச்சி வைக்கப் பட்டிருந்தது. அந்த இறைச்சி பொட்டலத்தை எடுத்து வந்து பிராமணரிடம் கொடுத்து, ‘‘இந்த பார்சலை உங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் பிரித்துப் பார்த்து விடாதீர்கள். வீட்டுக்குச் சென்ற பிறகே பிரித்துப் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லி அனுப்பினார்.

பார்சலை பெற்ற பிராமணர், வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்த அவருக்கு, பாபா கொடுத்த பார்சலில் என்ன இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை திடீரென ஏற்பட்டது. பார்சலைத் திறந்தார். உள்ளே இறைச்சி துண்டுகள் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். கோபமான அவர் அதைத் தூக்கி ஆற்றுக்குள் வீசினார். மறுவினாடி அந்த இறைச்சித் துண்டுகள் தங்கக் கட்டிகளாக மாறின.

அதைக் கண்டு பிராமணர் திகைத்தார். அவர் மனம் பரிதவித்தது. தங்கக் கட்டிகளை எடுக்கலாமா என்று அவர் நினைத்த போது அது ஆற்றுத் தண்ணீருக்குள் மூழ்கி எங்கோ சென்று விட்டது. சாய்பாபாவை நம்பாததால் வந்த வினை இது. பாபா சொல்லியபடி வீட்டுக்குச் சென்ற பிறகு அவர் பார்சலைத் திறந்து பார்த்திருந்தால், எல்லா நன்மைகளையும் பெற்றிருப்பார். எனவே சாய்பாபாவிடம் கோரிக்கை வைக்கும் போது அவசியம் பொறுமை வேண்டும்.

சாய்பாபா சீரடி அருகில் உள்ள நிம்கான், ரகாதா எனும் இரு கிராமங்களுக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஒரு தடவை ரகாதாவுக்கு சென்ற பாபா, அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக நாசிக்கை சேர்ந்த லட்சுமணன் கோவிந்த் என்பவர் சென்று கொண்டிருந்தார்.

தனது திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்த அவர், போதுமான அளவுக்கு பணம் கிடைக்காததால், ரகாதா கிராமத்தில் உள்ள மாமாவிடம் கடன் வாங்க வந்திருந்தார். மாமாவும் பணம் இல்லை என்று கை விரித்து விட்டதால் சோகத்தோடு ரகாதாவில் இருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் அவர் சாய்பாபா கண்ணில் தென்பட்டார்.

சாய்பாபா தாமாக முன் வந்து அவரைக் கூப்பிட்டார். ‘‘உன்னைப் பற்றிதான் நான் நேற்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீயோ…. என்னை பார்த்ததும், பார்க்காதது மாதிரி செல்கிறாய். நீ ஏன் இந்த ஊருக்கு வந்தாய்?’’ என்று கேட்டார். அதற்கு லட்சுமண் கோவிந்த், ‘‘எனக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. ஆனால் கையில் பணம் இல்லை’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

உடனே சாய்பாபா, ‘‘உன் திருமணத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் தருகிறேன், போதுமா?’’ என்றார். இதைக் கேட்டதும் லட்சுமண் கோவிந்த் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். அவர் செய்வதறியாது நின்றார். ஒரு துறவியால் தனக்கு எப்படி அவ்வளவு பெரிய தொகையைத் தர முடியும் என்று நினைத்தார்.

பாபா அவரிடம், ‘‘நீ நாசிக்கிற்கு திரும்பிப் போ. உனக்கு அங்கு பணம் கிடைக்கும்’’ என்றார். சாய்பாபா காலில் விழுந்து ஆசி பெற்ற லட்சுமண் கோவிந்த் அவரை நம்பிக்கையோடு பார்த்தார். பிறகு பாபாவிடம் ஆசி பெற்று நாசிக் புறப்பட்டுச் சென்றார்.

தனக்கு அறிமுகமான அனைவரிடமும் கடன் கேட்டார். அப்போது ஒரு மார்வாடி மிகச்சரியாக 2 ஆயிரம் ரூபாயை எடுத்து லட்சுமண் கோவிந்திடம் கொடுத்தார். ‘‘உனக்கு தர வேண்டும் போல தோன்றியது. தந்து விட்டேன். உனக்கு எப்போது முடியுமோ அப்போது இந்த பணத்தைத் திருப்பித்தா’’ என்று கூறிவிட்டு சென்றார்.

லட்சுமணுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சாய்பாபா சொன்னபடி செய்து காட்டி விட்டார் என்று ஆனந்த கண்ணீர் வடித்தார். அவரது திருமணம் ஜாம்… ஜாம் என்று முடிந்தது. பிறகு அவர் மனைவியுடன் சீரடி சென்று சாய்பாபாவிடம் ஆசி பெற்று சென்றார். சாய்பாபாவை முழுமையாக நம்பியதால்தான் லட்சுமண் கோவிந்த் வாழ்வில் இந்த அற்புதம் நடந்தது.

சாய்பாபாவின் தெய்வீக அதிசய சக்திகளை பற்றி ஹரிகனோபா என்பவருக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. எனவே பாபாவை பரீட்சித்து பார்க்கும் நோக்கத்துடன் அவர் ஒரு தடவை சீரடிக்கு சென்றிருந்தார். மசூதிக்குள் சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார். என்றாலும் அவருக்கு பாபா மீது ஏனோ நம்பிக்கை வரவில்லை.

அந்த சிந்தனையுடன் வெளியில் வந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்து வந்திருந்த புத்தம் புதிய செருப்பு காணாமல் போய் இருந்தது. ஏமாற்றத்துடன் அவர் விடுதிக்கு திரும்பினார். அன்று மதியம் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு சிறுவன் கம்பு நுனியில் புது ஜோடி செருப்பை கட்டித் தொங்க விட்டபடி, ‘‘இங்கு ஹரிகனோபா என்பவர் யார்? அவர் இந்த செருப்புகளை பெற்றுச் செல்லலாம்‘‘ என்று கூறியபடி வந்தான்.

அவனை ஹரிகனோபா தடுத்து நிறுத்தினார். ‘‘நான்தான் ஹரி’’ என்றார். உடனே அந்த சிறுவன், அவரிடம் புதுச் செருப்புகளை கொடுத்து, இதை சாய்பாபாவே உங்களிடம் ஒப்படைத்து விட்டு வருமாறு கூறினார் என்று தெரிவித்தான். ஹரிகனோபாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சாய்பாபாவுக்கு எப்படி தன்னைத் தெரியும்? தன் விலை உயர்ந்த செருப்பு தொலைந்து போனது எப்படி தெரியும்? அந்த புதிய செருப்பை மீட்டு எப்படி கொடுத்து அனுப்பினார்? என்று அடுக்கடுக்காக தமக்குள் கேள்வி எழுப்பி வியந்து போனார்.

அந்த நிமிடமே அவர் மனதில் பாபா மீது உண்மையான பக்தி ஏற்பட்டது. உடனே மீண்டும் மசூதிக்கு ஓடிச் சென்று பாபா கால்களில் விழுந்து கண்ணீர் மல்க ஆசி பெற்றார். பாபா அவரைப் பார்த்து புன்னகைத்தார். தன்னை நம்பி சீரடி தலத்துக்கு வந்த யாரையும் சாய்பாபா சும்மா அனுப்பியதாக வரலாறே இல்லை. அக்கோல்கட் பகுதியைச் சேர்ந்த வக்கீல் சபத் நேக்கர் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்.

1913-ல் அவரது ஒரே மகன் திடீரென மரணம் அடைந்தான். இதனால் சபத் நேக்கர் மிகவும் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் அவர் மனைவி ஒரு கனவு கண்டார். அந்த கனவில் முஸ்லிம் துறவி ஒருவர், ஏன் கவலைப்படுகிறீர்கள். நான் ஒரு குடம் புனித நீர் தருகிறேன் என்று சொல்லியபடி விரட்டுவது போல இருந்தது. இந்த கனவு பற்றி அந்த பெண் தன் கணவர் சபத் நேக்கரிடம் கூறினாள்.

இதையடுத்து இருவரும் சீரடிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சாய்பாபாவை பார்த்ததும், ‘‘இவரைத்தான் நான் கனவில் பார்த்தேன்’’ என்று சபத் நேக்கர் மனைவி ஆச்சரியத்தோடு கூறினாள். பிறகு அவள் பாபா காலில் விழுந்து ஆசிப்பெற்றாள். சபத் நேக்கரும் பாபா காலில் விழுந்து ஆசிப்பெற்றார்.

அப்போது பாபா, ‘‘இவனுடைய குழந்தையை நான் காப்பாற்றவில்லை என்று இவன் என்னை தினமும் திட்டிக் கொண்டே இருக்கிறான். அந்த குழந்தையை மீண்டும் நான் இந்த தாய் வயிற்றில் கொண்டு வரப் போகிறேன்’’ என்றார். பிறகு சபத் நேக்கர் மற்றும் அவர் மனைவியை அழைத்து தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அப்போது சபத் நேக்கர் மனைவி தன் உடலுக்குள் மின்சாரம் பாய்வது போன்று உணர்ந்தார்.

அடுத்த ஆண்டே அந்த தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சாய்பாபாவை நம்பி அவர் பாதம் பணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதற்கு அவர்கள் உதாரணமாக திகழ்ந்தனர். அடிக்கடி அவர்கள் அந்த குழந்தையை சீரடிக்கு எடுத்து வந்து பாபாவிடம் ஆசி பெற்றனர்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்